ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பான சிறப்பாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ஆ.ர.ராகுல் நாத், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எம்.வீரப்பன் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். கூட்டத்தில் பண்டிகைக் காலங்களில் இயக்கப்படும் அரசு சிறப்புப் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டன. கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களில் கூடுதலாகத் தற்காலிகப் பேருந்து நிலையங்களை அமைப்பது மற்றும் பேருந்துகளை நிறுத்துவதற்கான உகந்த இடங்களைத் தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.